
சேலம் பெரமனூரைச் சேர்ந்தவர் குமார் (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய அலைபேசிக்கு கடந்த மார்ச் 27ம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர், முதலீட்டுக்கு இரட்டிப்பு மடங்கு பணம் தரப்படும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய குமார், அந்த நபர் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் கேட்கப்பட்டு இருந்தபடி பெயர், வங்கி கணக்கு, ஆதார் எண், பான் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்தார்.
இதையடுத்து அந்த நபர், கூகுள்பே மூலம் முதலீட்டுத் தொகையை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதால், குமாரும் பத்து தவணைகளில் மொத்தம் 12.30 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். பல மாதங்கள் ஆகியும் முதலீட்டுத் தொகைக்கு உரிய இரட்டிப்பு லாபம் தராததோடு, அசல் பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். தன்னிடம் பேசிய மர்ம நபரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குமார், செப். 19ம் தேதி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கும்பல் குமாரிடம் போலியான வாக்குறுதி கொடுத்து பணத்தைச் சுருட்டி இருப்பது தெரியவந்தது.
இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல்துறையை 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.