Skip to main content

“போலீஸ் கேஸ் வேண்டாம் சார்... எங்க அம்மா அப்பா பாவம்” - கண் கலங்கிய சிறுமி 

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 deputy mayor who stopped the girl from being forced into marriage

 

சிதம்பரம் அருகே இருளர் பழங்குடி மாணவிக்கு நடக்க இருந்த கட்டாய குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர்.

 

சிதம்பரம் அருகே கிள்ளை தளபதி நகரைச் சேர்ந்த மீனா, ராஜா  தம்பதியினருக்கு 17 வயது மற்றும் 11 வயதில் இரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதுள்ள தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்குச் செல்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அக்கா மகன் செல்வா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வறுமையின் காரணமாகச் சிறுவயதில் தேவியை திருமண பந்தம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.

 

அதன்படி தற்போது கோடை விடுமுறை  நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு ராஜா குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு செல்வா குடும்பத்தையும் வரவழைத்துத் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இந்தத் திருமணத்திற்கு தேவிக்கு உடன்படவில்லை. பின்னர் அவர் எப்படியாவது 12 ஆம் வகுப்பு படித்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணி இரவில் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்  இந்தச் சிறுமியைப் பார்த்து யார்? இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு தேவி அழுதுகொண்டே நடந்த விபரத்தைச் சொன்னவுடன் அவர் தேவியை பேருந்து நிலையம் அழைத்து வந்து டீ, பன் வாங்கிக் கொடுத்து சிதம்பரத்திற்கு பேருந்து ஏற்றி அனுப்பியுள்ளார்.

 

பின்னர் சிதம்பரம் வந்த தேவி கிள்ளை தளபதி நகர் கிராம தலைவர் சின்னமணி வீட்டிற்குச் சென்று நடந்த தகவலைக் கூறி படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அதிர்ச்சி அடைந்து தேவியிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது தேவி, போலீஸ் கேஸ் வேண்டாம் சார் எங்க அப்பா, அம்மா பாவம் என்று கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்த அனைவரின் கண்களைக் குளமாக்கியது. கிள்ளை ரவீந்திரன் தேவியின் அப்பா ராஜாவிற்கு ஃபோன் செய்து உடனே  கிள்ளைக்கு வர வேண்டும் இல்லையேல் நீ இருக்கும் இடம் தேடி போலீஸ் வரும் என்று எச்சரித்துள்ளார்.

 

இதனைக் கேட்ட ராஜா உடனே ஊருக்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார். அப்போது கிள்ளை ரவீந்திரன், கிள்ளை தளபதி நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராஜா குடும்பத்தை அழைத்து ராஜா மற்றும் அவரது மனைவிக்கு அறிவுரை வழங்கி,  தேவி கல்லூரி படிப்பு முடியும் வரை முழு செலவை அவரே ஏற்றுக் கொள்வதாகவும்  படிப்பைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்றும், எந்தத் தொந்தரவு இல்லாமல் படிக்க விடுங்க எனக்கூறி திருமண நேரத்தில் தேவையான உதவியையும் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் Al கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தேவி மீது தனி கவனம் செலுத்தி நல்ல முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்குத் தேவையான பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகம் உள்ளிட்டவை குறித்து அவரே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு தேவியின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்தத் தகவல் அறிந்து கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கோவையில் பரபரப்பு 

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. 

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கஞ்சா போதையில் பெட்ரோல் திருட்டு; தட்டிக் கேட்டால் மிரட்டல்- அச்சத்தில் பொதுமக்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Gasoline theft under the influence of ganja; Intimidation on knocking - public in fear

                                                      கோப்புப்படம் 

சிதம்பரம் பகுதியில் கஞ்சா போதையில் நள்ளிரவில் வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், வரதராஜ நகர், தமிழன்னை நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், குருதேவ் நகர், முத்தையா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது. இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவர்களது வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்கு உள்ளே உள்ள போர்டிகோவில் அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் இருசக்கர  வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோலை திருடி செல்கின்றனர். இதனால் காலையில் எழுந்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.  மேலும் காலை நேரத்தில் அவசர வேலையாக வெளியில் செல்பவர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில்  இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து அதில் ஒருவர் வீட்டின் சுவர் மீது எறி குதித்து அங்கிருந்த 2 இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் நாய்கள் குறைத்துள்ளது.  வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் பாட்டிலை போட்டுவிட்டு மதில் சுவர் மீது எகிறி குதித்து ஓடி 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது வீட்டின் உரிமையாளரை மிரட்டும் தோணியில் சைகை காட்டி சென்றனர். இவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் இது போன்று தொடர்ந்து சுற்றுகிறார்கள் என்றும் பல்வேறு வீடுகளில் உள்ள இருசக்கர வாகனங்களில்  தொடர்ந்து பெட்ரோல் திருடி வருகிறார்கள். இரவு நேரத்தில்  போதையில் இருப்பதால் இவர்களிடம் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள் எனவே காவல்துறையினர் இதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தில் துறவாடி தெருவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதேபோன்று பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.