
தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என 10 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அதே சமயம் சட்டப்பேரவையின் கூட்டம் நடைபெற்று முடிந்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளபடி இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றும், நாளையும் (10.12.2024) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி முதல் நாளான இன்று, மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெஞ்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் துணை முதல்வராகப்பட்டார். இந்நிலையில் சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் 3வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு அடுத்ததாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 3வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல் வரிசையில் 10வது இருக்கை வழங்கப்பட்டிருந்தது.