கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா...!

 Deputy Chairman of Keeramangalam Municipality resigns ...!

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத்தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பல்வேறு இடங்களில் திமுக- அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றனர். இதனைத் தொடர்ந்து தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்தன. "கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

இன்று காலை நெல்லிக்குப்பம் நகர் மன்ற துணைத்தலைவர் பதவியை திமுகவின் ஜெயப்பிரபா ராஜினாமா செய்திருந்த நிலையில், புதுக்கோட்டை கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். இந்நிலையில் திமுக தலைவரின் அறிக்கையை அடுத்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமாரிடம் தமிழ்ச்செல்வன் கொடுத்துள்ளார்.

Keeramangalam Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe