
தஞ்சாவூர் அருகே 36 மாணவிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அன்றே இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து அங்கு பரபரப்பைக் கூட்டியது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பெற்றோர் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மீண்டும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என செய்திகள் பரவின.
இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.