
இந்தியாவின் 75-வது குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் மத்திய அரசு நடத்தும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திகளுக்கு இடமில்லை. இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவரது அறிக்கையில், "நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி , வேலு நாச்சியார், பாரதியார் போன்ற தலைவர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக தமிழக அரசின் சார்பில் ஊர்தி தயாரிக்கப்பட்டு அந்த ஊர்தி குடியரசு தினவிழாவில் அணிவகுப்பாக கொண்டுவரப்படும் என்ற நிலையில் அதற்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாரதியார், சிதம்பரனார், வேலுநாச்சியார முதலியோரை வெளிநாட்டவர்கள் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு காரணத்தைக் கூறி அதனை மறுத்துள்ளது வெட்கத்துக்குரியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது .
எனவே ஒன்றிய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக அலங்கார ஊர்தியையும் அணிவகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை வெளியிட வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்திருக்கிறார்.