/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4984.jpg)
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி. அதனைக் கொடுக்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கித் திவாரியை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் மேலும், அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அமலாக்கத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளலாம் எனத்தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகச் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், நேற்று (1ம் தேதி) இரவு சாஸ்திரி பவனில் வழக்கமாக இரவு பாதுகாப்புப் பணியில் இருக்கும் தனியார் பாதுகாப்பு அலுவலர்களிடம் இருந்து வளாகத்தின் சாவியை வாங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள், வளாகத்தின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர். மேலும், அங்கு ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, முதலில் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு நள்ளிரவு சமயத்தில் துணை ராணுவப் படையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களைத்தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அனுமதி மறுத்தது குறித்து துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு போலீஸாரிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்று பிறகு உள்ளே வாருங்கள் என வெளியே நிறுத்தி வைத்தனர். மேலும், அலுவலகம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது வழக்கு தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளது. அதனால் தற்போது மாநில அரசின் முறையான அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அங்கு மேலும் பரபரப்பான சூழல் நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)