Advertisment

டெங்கு காய்ச்சல்...  ஈரோட்டில் 400 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பரிசோதனை!

Dengue fever ... Test for 400 households in Erode!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் அடுத்ததாக டெங்குகாய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்கின்றனர் சுகாதாரத் துறையினர். இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசும் அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் பழைய போர்களில் தண்ணீர் தேங்கிக் கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் உள்ள வீடுகளில் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகர் வெட்டுகட்டுவலசில் சிறுமி ஒருவருக்கு டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவருக்கும் டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி சார்பில் இரண்டு இடங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள 400 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் காய்ச்சல், சளி உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, "தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கிக் கொள்ளாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இருக்கும் குடங்களை மூடி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்குகாய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. வெட்டுகட்டு வலசு பகுதியில் சிறுமி ஒருவருக்கும், சத்யா நகரில் தன் ஒருவருக்கும் டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர். இரண்டு பகுதியிலும் உள்ள 400 வீடுகள் சேர்ந்தவர்களுக்குச் சளி, காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன் அங்கு மாநகராட்சி சார்பில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மழைக் காலம் நெருங்கி வருவதால் மக்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்." என்றார்.

கரோனா வைரஸ் பரவல் இதுவரை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அடுத்ததாகப் பொதுமக்களை வாட்டி எடுக்க டெங்கு காய்ச்சல் காத்துக் கொண்டிருக்கிறது.

Healthy DENGUE FEVER Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe