
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே 98 வருடம் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கோவிலை இடித்து அகற்றத் தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று(4.3.2025) காலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. கோபி உதவி கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை சவுந்தரராஜன் மேற்பார்வையில் கோவில் இடிக்கும் பணி நடந்தது. ஜேசிபி எந்திரம் மூலம் பணியாளர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடித்து அகற்றினர்.
முன்னதாக கோவிலில் இருந்த சிலைகள் பத்திரமாக வேறு இடத்தில் கொண்டு வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு கோவில் இடிக்கும் பணி தொடங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது.