
'பாமக கட்சியின் தலைவர் பதவி அன்புமணிக்கு இல்லை; இனி நான்தான் தலைவர்' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 ம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். நீட் தேர்வு என்ற ஒன்று இருக்கக் கூடாது. ஒழிக்கப்பட பட வேண்டும்.
இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது. கோடைகாலம் வந்துவிட்டதால் மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். வடிகட்டி காய்ச்சி குடிக்க வேண்டும். இந்த காலத்திலாவது வீட்டுக்கு ஒரு பத்து மரங்களை வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்'' என்றார்.
முன்னதாக புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் மோதல் போக்கில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அன்புமணியின் தலைவர் பதவி திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸின் முடிவுக்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான்.ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்' என தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் ஆதரவாளர்கள் மத்தியில் ராமதாஸின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ராமதாஸின் இல்லத்தை முற்றுகையிட்டு பாமகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் நகர மன்ற முன்னாள் தலைவர் ராஜேஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.