Skip to main content

களப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020
Demand for Preservation of Field Inscriptions

 

தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வருகிறது. கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் இக்கல்வெட்டைப் பார்வையிட்ட பின் இதுபற்றி கூறியதாவது,

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக் கொண்டது.

தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இக்கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை,வெயில் போன்றவற்றால் கல்வெட்டு பாதிக்காத வகையில் கூரை அமைத்துப் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.