Demand for immediate release of seven Tamils ​​following Supreme Court order!

உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி சிறையிலுள்ள ஏழு தமிழர்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறோம்.

Advertisment

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு தமிழர்களும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஏழு பேரையும் முன்விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் அரசின் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையேபேரறிவாளன், விடுதலைக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த 21.01.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக ஆளுநர் தரப்பில் விடுதலைகுறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேன்டுமென உத்தரவிட்டது.

Advertisment

ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 12 நாட்கள் ஆகியும் இதுவரையில் விடுதலைகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு காலம் கடத்துவது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.

ஏழு தமிழர்களும் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்ததன் மூலம் இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து தொடர்ந்து அனுபவித்துவிட்டனர். இவர்களை இனியும் சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. மேலும், முன்விடுதலைகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு முரணானது.

எனவே, தமிழக ஆளுநர் இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் கோப்பில் கையெழுத்திட்டு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.