Delta farmers who pour water  to their distressed crops

Advertisment

‘தவிச்ச வாய்க்கு ஒருவாய் தண்ணீர் கிடைக்குமா’ என்கிற ஏக்கத்தில் டெல்டா மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள் காத்துக்கிடக்கின்றன. பயிர்களைக் காப்பாற்ற குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரைக்கொண்டு தெளிக்கும் அவலமான சூழல் நிலவி வருகிறது.

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரிப்பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடைமடைப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்குஒருமுறையும், பல கிராமங்களுக்கு இன்றுவரை தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. மேட்டூர் தண்ணீரை நம்பி குருவை சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.

சில விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றி வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது முப்போகம் விளைந்த மண்ணுக்கு வந்த சோதனையப் பாரு என்று கலங்கும் நிலையேஇருக்கிறது.

Advertisment

Delta farmers who pour water  to their distressed crops

நேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில், பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பயிரைக் காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமெனவும், தமிழக அரசுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர்களுக்கு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து தெளித்துவரும் விவசாயிகளோ, “வழக்கத்தை விட இந்த வருஷம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு. பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதை காப்பாற்ற தற்காலிக முயற்சியாக நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை குடங்களில் எடுத்துவந்து தெளித்து வருகிறோம். கிட்டத்தட்ட தவிச்சு நிற்கும் பயிருக்கு உசுரு தண்ணீர் ஊற்றி வருகிறோம் என்றுதான் சொல்லணும். இதுபோல எத்தனை நாளுக்கு ஊத்த முடியும்னு தெரியல, எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற அரசு முயற்சிக்கணும். அதோடு அவ்வப்போது முறைவைத்து திறக்கப்படும் தண்ணீரும் கூட ஆங்காங்கே நீர்நிலைகளில் நடந்துவரும் கட்டுமான பணிகளால் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இதுவரை மடைக்கு தண்ணீர் வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்கின்றனர்.