
மத்திய அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் போது, அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தகுந்த இடம் தருவோம். குறிப்பாக, அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு கேபினட் பதவியையும் 2 இணையமைச்சர் பதவியையும் ஒதுக்குவோம் என்று அதிமுகவிடம் சொல்லியுள்ளார். இந்தத் தகவலை எடப்பாடியிடமும் அமித்ஷா சொல்லியிருக்கிறாராம்.
அ.தி.மு.கவுக்கு ஒரு கேபினட் பதவி என்றும் அதைத் தன் மகன் ரவீந்திரநாத்துக்குதான் ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். தம்பிதுரையோ, ரவீந்திரநாத் முதல் முறையாக இப்பதான் பார்லிமெண்டுக்குள்ளேயே காலை வைத்திருக்கிறார். நானோ, நாடாளுமன்றத் துணைச் சபாநாயகராக இருந்தவன். டெல்லி அரசியல் எனக்கு அத்துப்படி. அதனால் கேபினட் பதவியை 'எனக்குன்னு சொல்லுங்க' என்கிறாராம். இன்னொரு சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.யும், "எனக்குத்தான் கேபினட் பதவி'ன்னு கொடி பிடிக்கிறாராம். அதேபோல் மத்திய இணையமைச்சர் பதவிக்கும், அ.தி.மு.க சீனியர்கள் மத்தியில் முட்டல் மோதல் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் அக்கட்சியினர்.