கரோனா ஊரடங்கால் இந்தியாவே முடங்கிக்கிடக்கிறது. ஹோட்டல்களும், டீக்கடைகளும்கூட மூடப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்ற முதியோர்களுக்கும், சமையல் தெரியாத பேச்சிலர்களுக்கும் உணவு விநியோகம் செய்யும் நபர்களே கடவுள். ஆனால் கடவுள் எப்போதும் அருள்புரிந்து கொண்டிருப்பாரா என்ன… பக்தர்களை அவ்வப்போது சோதிக்கவும் செய்வார்.
இந்தியத் தலைநகரமான டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரோடு தொடர்புடைய 17 உணவு விநியோகிக்கும் பணியிலுள்ளவர்களும், அவர்கள் டெலிவரி செய்த 72 நபர்களுமாக கிட்டத்தட்ட 90 பேருக்கு கரோனா தொற்று சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பிற நபர்களிடமிருந்து விலகியிருக்குமாறு கூறிதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.