/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_80.jpg)
அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காணுமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அண்ணா திமுக கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதற்குத் தொடர்பாக வழங்கப்பட்ட மனுக்ககள் நிலுவையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், புதிதாக ஒரு மனுவை பெற்று அதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், புதிய மனு மீதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார் , சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது புகழேந்தி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்தி வேணு, உயர்நீதிமன்றத்தை மதிக்கவில்லை. டெல்லி உயர்நீதிமன்ற கொடுத்த உத்தரவு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக நிலுவையில் உள்ளது. இதை நீதிமன்ற அவமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தினுடைய வழக்கறிஞர், “24ஆம் தேதி புகழேந்தியை அழைத்து இருக்கிறோம். அன்றைய தினம் அவரின் நிலுவையில் உள்ள மனுக்களை நிச்சயமாக கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு எடுத்துக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக விசாரிப்போம் என்கின்ற உறுதிமொழியை நீதி மன்றத்திற்கு தருகிறேன்” என கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி, நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலித்து 24 ஆம் தேதி உத்தரவு வழங்க வேண்டும் என கூறி வழக்கினை முடித்து வைத்தார். இடையில் எடப்பாடி பழனிசாமி அண்ணா திமுக அணியை சார்ந்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதிட முயற்சி செய்தார். உடனடியாக நீதிபதி இது தேர்தல் ஆணையத்திற்கும் புகழேந்திக்கும் நடக்கின்ற வழக்கு உங்களுடைய வழக்கல்ல. இதிலே தலையை விட வேண்டாம். உங்களது வாதங்களை கேட்கத் தயாராக இல்லை. உங்கள் வாதங்களை எடுத்துக் கொள்ளவும் மாட்டோம் எனக் கூறி பேச வேண்டாம் என நிராகரித்து விட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)