/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4036.jpg)
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரே பொதுச்செயலாளர் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கின் தீர்ப்பும் எடப்பாடிக்கு ஆதரவாகவே வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இ.பி.எஸ். தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் இருந்து வந்தது. அதனால், இ.பி.எஸ். சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு 10 நாட்கள் கெடு விதித்து தனது இறுதி முடிவை அறிவிக்கக் கோரி உத்தரவிட்டது. அதனை ஏற்ற தேர்தல் ஆணையம் இ.பி.எஸ்.-ஐ பொதுச்செயலாளராகவும், ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தது. அதேசமயம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது என்று கூறியது.
இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இது குறித்து ஆறு வாரத்தில் பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கும்தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)