
இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் கரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. தமிழகத்தில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 3ல் ஒரு பங்கு சென்னையில் மட்டும் பதிவாகி வருகிறது. தற்போதுவரை தினசரி 8 ஆயிரம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மற்ற நகரங்களைவிட சென்னையில் கரோனாவை உறுதிப்படுத்த எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் ஆகியும் முடிவுகள் வரத் தாமதமாவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அரசு பணியில் இருப்பவர்கள் இதனால் பெரிய அளவில் நிர்வாகச் சிக்கல்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள அரசு மூத்த பெண் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த வாரம் உடல் வலி, லேசான ஜூரம், தொண்டை வலி காரணமாக அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வரும் என்று மருத்துவ ஊழியர்கள் தெரிவித்து என்னுடைய தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் மூன்று நாட்களைக் கடந்தும் பரிசோதனை முடிவுகள் எனக்கு வரவில்லை. கரோனா கொடுக்கும் வலியைக் காட்டிலும் இந்த காலதாமதம் மேலும் மன உளைச்சலைக் கொடுக்கிறது. அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருக்கும் பட்சத்தில், கரோனா நெகடிவ் என்று காலம் கடந்து வந்தால் தங்களின் பணி பாதிப்பதோடு தேவையில்லாத விடுமுறையும் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது" என்றார். சென்னையில் பரிசோதனை எண்ணிக்கையில் அதிக அளவிலான பணியாளர்களை ஈடுபடுத்தி விரைவில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.