defrauded teachers issue whatsapp audio store thoothukudi

Advertisment

அரசுப் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது வெளியான பகீர் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமரேசன். இவர், ஆதவா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வந்தார். இந்தத்தொண்டு நிறுவனம் மூலமாகத்தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார். இந்நிலையில், தனது அறக்கட்டளை மூலம் தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாகக் கூறி, இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களிடம், சுமார் மூன்று லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவ்வாறு பணம் கொடுத்தவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுஅப்பள்ளிகளில் வேலை பார்த்தும் வருகின்றனர்.

இதில், மூன்று லட்சரூபாய் பணம் கொடுத்தவர்களுக்கு 15 ஆயிரமும், 5 லட்சரூபாய் பணம் கொடுத்தவர்களுக்கு 25 ஆயிரமும், இந்த நிறுவனம் மூலம் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சட்டவிரோத கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,கடந்த டிசம்பர் மாதத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாலகுமரேசன் தலைமையில் கஞ்சா கும்பலைக் கைது செய்ய வேண்டும் எனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆதவா அறக்கட்டளைதொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் பாலகுமரேசன் மீது கஞ்சா கும்பல் முன்விரோதத்துடன் இருந்தது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் பாலகுமரேசனைச் சுற்றி வளைத்த மர்மக் கும்பல் ஒன்று, அவரைச் சரமாரியாக வெட்டினர். மேலும், இந்தக் கோரச் சம்பவத்தில் படுகாயமடைந்த பாலகுமரேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில், ஏழு மாதங்களாக ஆதவா அறக்கட்டளை நிறுவனத்தால் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

Advertisment

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாலகுமரேசனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அவர் சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டவாட்ஸ்அப் குழுவில் இருந்தும் அவர் விலகி உள்ளார். ஒரு கட்டத்தில், இதனால் ஆத்திரமடைந்த 60க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள், ஆதவா அறக்கட்டளை அலுவலகத்தை முற்றுகையிட்டுத்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள், பாலகுமரேசனிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளோம் என்றும், அந்தப் பணத்தை மீட்டுத் தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இதைக் கேட்ட போலீசாரும் இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலகுமரேசன் வாட்ஸப் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், "நான் உங்களுக்குதரமாட்டேன்னு சொல்லல. நீங்க எல்லாரும் அவசரப்பட்டுடீங்க. உங்களுக்கு கொடுக்க என்கிட்ட என்ன ப்ராப்பர்ட்டி இருக்கு. நானே நொந்து போய் உக்காந்துட்டு இருக்கேன். இனிமே என்னால் எப்படி அறக்கட்டளை நடத்த முடியும். எப்படி பணத்தை தர முடியும். நீங்களே சொல்லுங்க. நான் இப்ப உயிர விடுற கண்டிஷன்லஇருக்கேன். கண்டிப்பா உங்களுக்கு நல்ல தகவல் வரும். அவரு போய் சேர்ந்துட்டாருன்னு சொல்லுவாங்க. அதை பார்த்துக்கோங்க” என உருக்கமாகப் பேசியிருந்தார். தற்போது, இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர். அதே சமயம், பாலகுமரேசனின் இந்த ஆடியோ கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment