Skip to main content

“போலீஸிடம் நிச்சயம் சிக்குவார்கள்... ரகசியமாக விசாரித்துவருகிறோம்” - மாவட்ட எஸ்.பி. அதிரடி!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

"definitely get caught ... We are secretly investigating" - District SP Action

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கள்ளக்குறிச்சி நகரில் ஆன்லைன் சூதாட்ட கும்பல் செயல்படுவது குறித்து அவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் 'ஒன் எக்ஸ் பெட் ஆப்' என்ற சூதாட்ட பந்தயம் நடத்திவந்தது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட செல்லம்பட்டு மணிகண்டன், மண்மலை கிருஷ்ணமூர்த்தி, சின்னசேலம் கோகுல்நாத், அருண்குமார், ஆர். மணிகண்டன், சங்கராபுரம் மணிவேல், ஈஷாந்தை அரவிந்த், கரடிசித்தூர் பாலாஜி, நாமக்கல் மாவட்டம் சாமி நாயக்கன்பட்டி சந்திரசேகர் ஆகிய ஒன்பது பேர்களைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டத்தின் தலைவன் போன்று செயல்பட்டுவந்துள்ளார். இவர்களிடமிருந்து 30 செல்ஃபோன்கள், 400 சிம்கார்டுகள், ஒரு ராயல் என்ஃபீல்டு பைக், 20 லட்சம் மதிப்புள்ள கார், 9 கம்ப்யூட்டர்கள் அவைகளுக்குத் தேவையான, யுபிஎஸ், சி.பி.யூ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 

சூதாட்ட கும்பல் தலைவன் போல செயல்பட்ட மணிகண்டன் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளார். மேலும், இதேபோன்று சூதாடி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். பிடிப்பட்ட ஒன்பது பேர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கும்பல் மட்டும் பிடிபட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு முழுக்க ஆன்லைன் சூதாட்ட கும்பலிடம் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஏராளம். கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருச்சி காவல் நிலையத்தில் வேலை செய்த காவலர் ஒருவர், சேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்த வெங்கடேஷ்... இப்படி பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து நாம் ரகசிய புலன்விசாரணையில் ஈடுபட்டோம். அதற்காக ஆன்லைன் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள், இது தவறு என்ற மனநிலையில் உள்ளவர்கள் என பலரிடம் கேட்டோம். 

 

"definitely get caught ... We are secretly investigating" - District SP Action

 

இந்த சூதாட்டத்தை ஊக்கப்படுத்த, பெரும்பாலான செல்ஃபோன்களுக்கு விளையாடுங்கள் என்று எஸ்எம்எஸ் வரும். மேலும், உங்களுக்கு 2000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் போனஸ் தருகிறோம். இந்தப் பணத்தைக் கொண்டு கணக்கை ஆரம்பித்து ஆட்டத்தை தொடங்குங்கள் என்று அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் கூட அனுப்புவார்கள். அந்தப் பணத்தை வைத்து நம்மை சூதாட்டத்தில் இணைத்துவிடுவார்கள். பிறகு நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பறித்துக்கொள்கிறார்கள். இதில் மிகப்பெரிய மோசடி ஒவ்வொருவரும் இந்த ஆட்டத்தில் தனித்தனியாக உட்கார்ந்து செல்ஃபோனில் சூதாடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள் அப்பாவிகள். ஆனால் இதில் மோசடியில் ஈடுபடும் கும்பல் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனி நெட்வொர்க்கில் இணைந்திருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சூதாட்ட ரகசியங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். உதாரணத்திற்கு ஒரு டேபிளில் 6 பேர் சூதாடுகிறார்கள் என்றால் அவர்களில் நான்கு பேர் அவர்களின் நெட்வொர்க் ஆட்களாக இருப்பார்கள். அவர்கள் பணம் இழப்பது போன்று காட்டிக்கொள்வார்கள். ஆனால் மற்ற இரண்டு அப்பாவிகளின் பணத்தை நால்வரும் சேர்ந்து பறித்துவிடுவார்கள். இதன் மூலம் அப்பாவி இளைஞர்கள் சூதாட்டத்தில் தோற்று பணத்தை இழந்துவிடுவார்கள்.

 

அப்படி சேரும் பணத்தை அந்த நெட்வொர்க் கும்பல் தங்களுக்குள் பங்கு பிரித்துக்கொள்ளும். அப்படிப்பட்ட கும்பல்தான் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டவர்கள். மேலும், இதில் ஆர்வமுள்ள நபர்கள் தங்களுக்குத் தெரிந்த அப்பாவிகளின் வங்கி கணக்கு விபரம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு எண் இவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவர்கள் பெயரில் இவர்கள் விளையாடுவார்கள் அதில் வரும் லாப பணம் அப்பாவிகளின் வங்கிக் கணக்கில் சென்று சேரும். பிறகு அவர்களிடம் கமிஷன் போன்ற ஒரு பெரும் தொகையை வைத்துக்கொண்டு அவர்களிடமிருந்து மீதி பணத்தை இவர்கள் வாங்கிக்கொள்வார்கள். எந்த உழைப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தங்களுக்குப் பணம் கிடைப்பதைக் கண்டு சந்தோஷத்தில், அப்பாவி மனிதர்கள் அவரவர் உறவினர்கள் நண்பர்களிடம் எந்த உழைப்பும் இல்லாமல் நமக்குப் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி விளையாடும் கும்பலிடம் கொடுப்பார்கள். அதனைக் கொண்டு 4 பேர், ஐந்து பேர் விளையாட்டை ஒருவரே விளையாடுவார். இதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும். இதுபோன்று மோசடி சூதாட்டத்தில் ஒரே இரவில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் உள்ளனர். 

 

"definitely get caught ... We are secretly investigating" - District SP Action

 

இதுபோன்று அபரிதமாக பணம் கிடப்பதைப் பார்த்து கிராமங்களில், நகரங்களில் உள்ள பல பெற்றோர்கள் படித்த தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்ஃபோன்களை வாங்கிக்கொடுத்து விளையாட தெரிந்த அவர்களது உறவினர்கள் போன்றவர்களிடம் அழைத்துச்சென்று தன் குழந்தைக்கும் சூதாட்டத்தை கற்றுக் கொடுக்கச் சொல்லும் கொடுமையும் நடந்துவருகிறது. அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையின் காரணமாக தங்களது பிள்ளைகளைத் தவறான வழிக்கு பெற்றோர்களே கொண்டு செல்லும் செயல்கள் கிராமப்புறங்களில் அதிக அளவில் நடந்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு இளைஞனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மாமனார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற மருமகன் மாமனாரின் செல்ஃபோனை அவருக்குத் தெரியாமல் எடுத்து அதில் விளையாடியுள்ளார். அதில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை பணம் பறிபோயுள்ளது. மாமனாரின் வங்கிக் கணக்கிலிருந்து சூதாட்டக் கும்பலுக்கு அவ்வப்போது பணம் செல்வது குறித்த எஸ்எம்எஸ் மாமனாரின் செல்ஃபோனுக்கு வந்துள்ளது. அப்போதெல்லாம் மருமகன் அதை டெலிட் செய்துவிடுவார். பிறகுதான் தெரிந்தது, மருமகன் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தைப் பறிகொடுத்துள்ள கொடுமை. 

 

இப்படிப்பட்ட சூதாட்ட நபரிடமிருந்து என் மகள் எப்படி வாழ்வான் என்று மாமனார் போர்க்கொடி தூக்க, அந்த குடும்பத்தில் பிரச்சனை வெடித்து. பின்னர் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டு பிரிந்து கிடக்கிறது என்கிறார் தனது பெயரைக் கூற மறுத்த இளைஞர் ஒருவர். சின்னசேலம் பகுதியில் உள்ள பல கிராமங்களில் படித்த இளைஞர்கள் இந்த சூதாட்டத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதன் மூலம் சிலர் பல லட்சம் பணம் சம்பாதித்து வீடு நிலம் இருசக்கர, நான்கு சக்கர, வாகனங்கள் வாங்கி அதில் வலம் வருகிறார்கள். சின்னசேலத்தில் உள்ள தேசிய வங்கிகளில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான கோடிகள் வரவு செலவு ஆகியுள்ளது. அதில் ஒரு கிராமத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் பல நபர்களுக்கு வந்ததாக அந்த வங்கியில் பணி செய்யும் ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. இதைப் பற்றி பலரும் காவல்துறையினருக்குப் பல புகார்களை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிற நிலையில், காவல்துறையினர் ரகசிய முறையில் இதைப் பற்றி விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் ஆன்லைன் சூதாட்டம் பல குடும்பங்களை சீரழித்துவருகிறது, பல மனித உயிர்களைப் பறித்துவருகிறது, உடல் உழைப்பை நம்ப வேண்டும் நேர்மையான வழியில் உழைத்துப் பிழைக்க வேண்டும், இதுபோன்ற தவறான வழியில் பணம் சம்பாதிக்க கூடாது, அப்படியே சம்பாதித்தாலும் அது உங்களை சிக்கலில் மாட்டிவிடும் என்று விழிப்புணர்வு செய்துவருகிறார்கள. 

 

அப்படிப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் நடக்கிறது என்கிறார் சேலத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் குமார். பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மேன் வேலை கிடைத்தது. கம்ப்யூட்டர் இயக்குவதில் திறமைசாலியாக இருந்த அந்த இளைஞரை, அதிகாரிகள் பெரம்பலூரில் உள்ள அஞ்சலகத்தில் வேலைக்கு அழைத்துக்கொண்டனர். அவர் அஞ்சலகத்தில்  பெண்கள் சேமிப்பு பணம் மற்றும் தங்கமகள் திட்டம் போன்றவற்றில் செலுத்திய பணத்தில் சுமார் 40 லட்சம்வரை மோசடி செய்து அந்தப் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அது கண்டுபிடித்த அஞ்சலக அதிகாரிகள் ரகசியமாக அந்த இளைஞரைக் காவல்துறையில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்பி அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கோனேரிபாளையத்தைச் சேர்ந்த, 200, 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களைக் கூட தொடர்பு ஏற்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள். 

 

"definitely get caught ... We are secretly investigating" - District SP Action

 

இதுகுறித்து ஆன்லைன் சூதாட்டத்தில் 9 பேர் கைது செய்ய காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களிடம் கேட்டோம், “பொதுமக்கள், படித்த இளைஞர்கள் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆசை காட்டி அவர்களை அதில் சிக்க வைத்துப் பணம் பறிப்பார்கள். சூதாட்டத்தில் கொஞ்சம் பணத்தை இழப்பவர்கள் இழந்த பணத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பணத்தை இழப்பார்கள். கேம்ப்ளிங், மோசடி, லஞ்சம், வழிப்பறிக் கொள்ளை மூலம் அப்பாவி மக்களின் பணத்தைப் பறிப்பவர்கள் வாழ்க்கை வெற்றி பெற முடியாது. இப்படிப்பட்ட கிரிமினல் பேர்வழிகள் காவல்துறையிடம் நிச்சயம் சிக்கிக்கொள்வார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும். ஆடம்பரமான செல்ஃபோன்களை வாங்கித் தரக் கூடாது. முக்கியமான தேவைகளுக்காக அதை வாங்கிக் கொடுத்தாலும் கூட அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் இதுபோன்று மோசடிகளில் ஈடுபடுபடுவர் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் இதுபோன்று யாராவது சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது குறித்து ரகசியமான முறையில் விசாரணை நடத்திவருகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, உழைப்புபற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். இப்படி மோசடி மூலம் வரும் பணம் அவர்களைப் பல சிக்கலில் மாட்டிவிடும்” என்கிறார் மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சத்தீஸ்கர் அரசியலில் புயலை கிளப்பிய மோசடி வழக்கு! துபாயில் நடந்த கைது!

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Fraud case that created a storm in Chhattisgarh politics! The arrest in Dubai!

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர் அவரது நண்பர் ரவி உப்பால் இருவரும் சேர்ந்து மாகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தனர். இந்த செயலி தேர்தல் முடிவுகளை கணிப்பது முதல் வானிலை முன்னறிவிப்புகள் என பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளது. இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை செயலியின் செயல்பாடுகளை கண்காணிக்க, வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்த தொடங்கியது. 

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருவதும் 70-30 சதவீத விகிதத்தில் கிளைகளை நடத்தி வருபவர்களுக்கு லாப பங்கீடு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 417 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்த செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகரின் திருமணம் கடந்த பிப்ரவரியில் துபாயில் நடைபெற்றது. ரூ.200 கோடி செலவில் இந்த திருமணம் நடந்ததாக அமலாக்கத்துறையினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதில் 17 பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறியது. 

மேலும், இந்த செயலி மீதான சோதனைகளின் போது, கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த சோதனையில் சிக்கிய ஆசிம் தாஸ் என்ற ஊழியரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகலுக்கு சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரூ.508 கோடி கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இது சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தி ரூ.6,000 கோடி வரை பணமோசடி நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் செயலியின் உரிமையாளர்களான இருவருக்கும் எதிராக சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, சூதாட்ட செயலியின் உரிமையாளர்கள் இருவரையும் பிடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க அமலாக்கத்துறை சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், சர்வதேச போலீஸ் அவர்கள் இருவருக்கும் எதிராக ‘ரெட் கார்னர்’ அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்த ரவி உப்பாலை கடந்த வாரம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த செயலியின் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகரை தேடும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Verdict tomorrow in case against online games ban

 

தமிழக சட்டப் பேரவையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியலமைப்பு வழங்கக்கூடிய அதிகாரங்களுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், போலீசார் என இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இதையடுத்து கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே சமயம் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (09.11.2023) மதியம் 02.15 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.