கிருஷ்ணகிரி அருகே, ஆண் நண்பரை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சையத் நகரைச் சேர்ந்தவர் கலீல் பாஷா. துபாயில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷபானா (32). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சதாம் ஹூசேன் (26) என்பவருக்கும் 'தவறான தொடர்பு' இருந்தது.

ஆனால் சதாம் ஹூசேன், தனக்கு திருமணம் நடந்ததை அடுத்து ஷபானா உடனான தொடர்பை துண்டித் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஷபானாவுக்கு, சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த மஹபூப் ரஹிமான் (30) என்பவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சதாம் ஹூசேன், தன்னைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு வைக்கக் கூடாது என்று ஷபானாவை அடிக்கடி கண்டித்து வந்தார். உன்னைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் உன் கணவனிடம் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், சதாம் ஹூசேனின் மிரட்டல் போக்கு அதிகரிக்கவே, அவரை தீர்த்துக் கட்டிவிட ஷபானா தீர்மானித்தார். இதுபற்றி அவர் மஹபூப் ரஹிமானிடமும் சொல்லி, அவரையும் உதவிக்கு அழைத்தார்.
இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, சதாம் ஹூசேனை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று கூறி, அவரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பி ஷபானாவின் வீட்டிற்குச் சென்ற சதாம் ஹூசேனை, அங்கே கொலைத் திட்டத்துடன் தயாராக இருந்த ஷபானாவும், அவருடைய புதிய ஆண் நண்பர் மஹபூப் ரஹிமானும் அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்தனர். பின்னர் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, மகனூர்பட்டி ஏரியில் புதைத்தனர்.
ஆனால், வெளியே சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்ற கணவனை காணவில்லை என சதாமின் மனைவி சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். செல்போன் எண்களை வைத்து காவல்துறையினர் கொலையாளிகளை நெருங்கிய நிலையில், திடீரென்று சதாமை கொன்றதாக மஹபூப் ரஹிமான் மகனூர்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக ஷபானா, உடந்தையாக இருந்ததாக அவருடைய தம்பி ஸாகிர் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிந்து, நீதிபதி விஜயகுமாரி சனிக்கிழமை (பிப். 1) தீர்ப்பு அளித்தார்.
கொலை மற்றும் கூட்டு சதி குற்றங்களுக்காக ஷபானா, மஹபூப் ரஹிமான் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஷபானாவின் தம்பி ஸாகிருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், அரசு வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜரானார்.