ADVERTISEMENT

வீடு புகுந்து கொள்ளை... ஈரோட்டில் எகிறும் க்ரைம் ரேட்...! 

08:12 AM Jan 30, 2020 | kalaimohan

சமீப காலமாக மீண்டும் ஈரோட்டில் குற்றச் சம்பவங்கள் பெருக தொடங்கி விட்டது. பெண்களின் தாலிக்கொடி அறுப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, அடுத்து கொலை சம்பவம் என ஈரோட்டில் க்ரைம் ரேட் எகிற தொடங்கி விட்டது. நேற்று நடந்த கொள்ளை சம்பவம் தான் இது. ஈரோடு, மூலப்பாளையம் ,திருப்பதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சசிகுமார் கோவையில் தங்கி கட்டிட ஒப்பந்த தொழிலை செய்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் வந்து தங்குவார். இவரின் மகள் சென்னையில் தங்கி படித்து வருகிறார். எனவே பெரும்பாலும் அவரின் சாந்தி மட்டும் வீட்டில் இருப்பார்.

ADVERTISEMENT


இந்தநிலையில் சென்ற வாரம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள சாந்தியின் தாயார் இறந்துவிட்டார். அந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சாந்தி ,சசிகுமார் சென்னைக்கு போய்விட்டனர். பிறகு சசிகுமார் கோவைக்கு சென்றுவிட்டார். சாந்தி சென்னையிலேயே ஒரு வாரம் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சாந்தியின் வீட்டு பூட்டு உடைந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சாந்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சாந்தி உடனடியாக சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 39 பவுன் நகை, 40 ஆயிரம் ரொக்கப் பணம், ஒரு லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது.

ADVERTISEMENT

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் மக்கள் நெருக்கமாக வாழும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT