Skip to main content

தொடரும் அவலம் - தண்ணீர் தேடி அலைந்த புள்ளிமான் நாய் கடித்து பலி

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், காடுகளில் வாழும் வனவிலங்குகள் என அனைத்து உயிரினங்களும் அவதிப்பட்டு வருகிறது. தண்ணீரை தேடி அலையும் விலங்குகளை மற்ற விலங்குகள் வேட்டையாடி கொன்றுவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.  15 நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 புள்ளிமான்கள் நாய் கடித்து பலியாகி உள்ளது.

d


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் முதல் வம்பன் வரை வனத்துறைக்கு சொந்தமான முந்திரி மற்றும் தைலமரக்காடுகள் உள்ளது. தைல மரங்கள் அதிகமாக உள்ள காட்டில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை. அனல் அதிகமாக உள்ளது. 


இந்த காடுகளில் மான், மயில், முயல், குரங்கு, பறவைகள் ஏராளம் உள்ளது. ஆனால் அவற்றின் தேவைக்கு காடுகளுக்குள் தண்ணீர் வசதி இல்லை. காடுகளில் குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து வன விலங்குகளுக்கு உதவி செய்த காலம் மாறிவிட்டதால் கவனத்துறை காடுகளில் வசிக்கும் விலங்குகள் பறவைகள் தண்ணீரை தேடி விவசாய ஆழ்குழாய் கிணறுகளை நோக்கி நீண்ட தூரங்கள் செல்கிறது. 

 

விலங்குகள் செல்லும் வழியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதால்  நாய்கள் ஏராளமாக நிற்கும். அந்த நேரங்களில் செல்லும் மான், மயில்களை நாய்கள் கடித்து குதறிவிடுகிறது. இப்படித்தான் இன்று புதன் கிழமை தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியே வந்த பெரிய புள்ளி மானை நாய்கள் கடித்து குதறி கொன்றுவிட்டது.
   

இதே போல கடந்த 15 நாட்களுக்கு முன்பு கீரமங்கலம் சேந்தன்குடியில் வனத்துறைக்கு சொந்தமான  முந்திரிக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க ஒரு விவசாய ஆழ்குழாய் கிணறுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு காட்டுக்கு திரும்பும் போது ஒரு நாய் புள்ளி மானை கடித்து குதறியது. அந்த மான் சிறிது நேரத்தில் துடிதுடத்து இறந்தது. பிறகு வனத்துறையினர் மானை மீட்டுச் சென்றனர். இப்படி தண்ணீர் தேடிச் செல்லும் மான்கள் நாய்களுக்கு பலியாகும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது.


இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும் போது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறைக்கு அதிகமான நிலங்கள் உள்ளது. அதில் தண்ணீரை உறிஞ்சி வெப்பத்தை வெளிப்படுத்தும் தைலமரக்காடுகளே அதிகம். முந்திரி காடும் உள்ளது. அந்த காடுகளில் வாழும் வன விலங்குகளின் தேவைக்கு தண்ணீர் வசதி எங்கேயும் இல்லை. அதனால் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்கு செல்லும் மான் போன்ற வனவிலங்குகள் நாய்களாலும் வேட்டைக்காரர்களாலும் இறையாக்கப்படுகிறது. இந்த அவல நிலையை போக்கவில்லை என்றால் வனவிலங்குகளை பாடப்புத்தகங்களில் மட்டுமே காணமுடியும். அதனால் தமிழ்நாடு வனத்துறை வனவிலங்குகள், பறவைகளை பாதுகாக்க காடுகளில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றனர்.   


காகிதங்கில் மட்டும் தண்ணீர் தொட்டிகளை அமைக்காமல் உண்மையாகவே தண்ணீர் தொட்டிகளை அமைத்தால் குறைந்து வரும் வனவிலங்குகளை காப்பாற்றலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

மான் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிய வனத்துறை; இருவர் தலைமறைவு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

virudhachalam reserve forest deer incident forest ranger enquiry

 

சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை ஒட்டி நீண்டு கிடக்கிறது வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகள். இந்த காட்டில் மான்கள், மயில்கள், முயல்கள் காட்டுப் பன்றிகள், எறும்பு திண்ணிகள், உடும்புகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த நிலையில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், வனக்காப்பாள்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்தன் ஆகியோர் வேப்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் வனக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது காட்டுக்குள் ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டுக்குள் திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வனத்துறையினர் முயன்றனர். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் இருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து மான் ஒன்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் வனத்துறையினர் கையில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் மகன் யாக்கோப் (வயது 29) என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற இருவரும் அதே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ், மொட்டையன் என்பது தெரிய வந்தது.

 

யாக்கோபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மான் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்தது. அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியில் மேலும் இரண்டு குண்டுகள் இருந்தன. இதையடுத்து வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வனத்துறையினர் பிடிபட்ட யாக்கோப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

 

 

Next Story

மான் வேட்டைக்கு வந்த இருவர் கைது; வனத்துறை அதிரடி!

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Two persons arrested for deer hunting

 

சேலம் அருகே காப்புக்காடு பகுதியில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம் சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு மலைப்பகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி தெற்கு காப்புக்காடு பகுதியில் வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதாக வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சேர்வராயன் வடக்கு வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனக்காவலர்கள் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அதில், மஞ்சவாடி காப்புக்காடு கரும்பாறை வழித்தடத்தில் மர்ம நபர்கள் 2 பேர் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டனர்.    

 

தீவிர விசாரணையில், தப்பி ஓடிய நபர்கள் குறித்த விவரம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் ஏற்காடு அரங்கம் பகுதியைச் சேர்ந்த மணி (43)  என்பதும், மற்றொருவர் செந்திட்டு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (33) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை  வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சவாடி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.