
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த வருட தீபாவளி போனஸாக 10 சதவிதம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த போனஸை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளிக்காக 10%, அதாவது ரூ.8400 மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு இது போதுமானதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நடப்பாண்டில் போனஸ் அளவு உயர்த்தப்படாவிட்டாலும் பரவாயில்லை, பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்பை காரணம் காட்டி 10% போனஸ் வழங்கப்பட்டதை அனைத்துக் கட்சிகளும் விமர்சித்தன. நடப்பாண்டில் நிலைமை சீரடைந்துள்ள போதிலும் பாதியளவு மட்டுமே போனஸ் வழங்குவதை ஏற்க இயலாது. குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க வேண்டும்‘’ என்று பதிவு செய்துள்ளார் அன்புமணி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)