Deepak Raja case; After 7 days consenting parents

நாங்குநேரி தீபக் ராஜா கொலை வழக்கில் அவருடைய உடலைப்பெற பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஒருபுறம் உடலை வாங்க மறுத்து தீபக் ராஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தீபக்ராஜாவின் உடலைப் பெற்றுக்கொள்ள தற்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் 7 நாட்களுக்குப் பிறகு தீபக் ராஜாவின் உடல் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. தீபக் ராஜாவின் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட இருப்பதால் அவர் உடலை கொண்டு செல்லும் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் உடல் செல்லும் வழியில் உள்ள கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களை சிறிது நேரம் மூடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளது.