Skip to main content

என்ன செய்யலாம்? தொண்டர்களிடம் கருத்து கேட்ட ஜெ.தீபா!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட பேருராட்சி, ஊராட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடத்தப்படும் என்கிற அறிவிப்போடு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மீது அபிமானமுள்ள சீனியர்கள் யார் இருந்தாலும் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று நிர்வாகி தீபா அறிவிப்பு கொடுத்திருந்தார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை நிர்ணயம் செய்யும் கூட்டம் என்ற அறிவித்து இருந்ததால் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வேன்களில் வந்து குவிந்தனர். 
 

 

 

இந்த கூட்டத்தின் ஏற்பாடுகளை கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமுருகன் திருமணம மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். 

 

Deepa Party in Karur


 

கூட்டம் அரங்கு நிரம்பி வழிந்தாலும் தீபா என்ன சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலாக காத்து கொண்டிருந்த நேரத்தில் திடீர் என சுட சுட அப்போது தான் அடித்திருந்த கருத்து கேட்பு படிவம் ஒன்று எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அதில் 
 

முதல் கேள்வி - தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? 
 

இரண்டாவது கேள்வி - எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா? 
 

மூன்றாவது கேள்வி - தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என்று படிவம் ஒன்று வழங்கப்பட்டது. 
 

இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். 
 

கருத்து படிவம் பூர்த்தி செய்தவர்களிடம் பேசிய போது, 

இதில் முதல் இரண்டு கேள்விகளுக்கு கட்சியினர் இடையே எந்த பதிலும் இல்லை ஆனால் மூன்றாவது கேள்வியை வாசிக்கும் போது மட்டும் அங்கிருந்தவர்களிடையே பெரிய கைதட்டலுடன் கூடய ஆரவாரம் எழுந்தது. அது அடங்குவதற்கே பல நிமிடம் பிடித்தது. இதையே தான் அந்த கருத்து படிவத்திலும் எதிரொலித்து இருக்கும் என்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினர் மகாலிங்கம் என்பவர். பின்னர் கூட்டத்தில் பேசிய முக்கிய அமைப்பாளர்கள் பலரும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

 

Deepa Party in Karur


 

பின்னர் கடைசியாக பேசிய ஜெ.தீபா இது வரை எந்த கூட்டத்திலும் இல்லாதா அளவிற்கு 1 மணிநேரம் பேசினார்.
 

அதில் அவர் கூறியதாவது, 

ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தெண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் சகித்து கொள்கின்றனர்.


 

Deepa Party in Karur


 

இதை மாற்றுவது தொண்டர்களாகிய உங்கள் கையிலும், மக்கள் கையிலும் உள்ளது. தீய எண்ணம் உடையவர்களிடம் இருந்து கழகத்தை மீட்க வேண்டும். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். தூத்துக்குடி துப்பாக்கி சூடும் நடந்திருக்காது.

இன்றைக்கு நடந்து கருத்து கூட்டம் போன்று தமிழகம் முழவதும் மாவட்டம் தோறும் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை கேட்டு நான் நடந்து கொள்கிறேன்.

 

 


பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர்.

இது தவறு. நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன். இவ்வாறு கூறினார். 

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்