Deep sea hydrocarbon project will increase climate change says Ramadoss

Advertisment

தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் 10ஆவது சுற்று ஏல அறிவிப்பில் தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டம் செயலாக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும்.

தமிழ்நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரிப்பன்மய வளங்களில் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பகுதியும் ஒன்றாகும். பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாக தகுதி பெற்றுள்ள இப்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழ்நாட்டின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீன்வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில்வாயுக்கள் வெளியேற்றத்தை இத்திட்டம் அதிகமாக்கும். எனவே, இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.