விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கு யாரும் அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையில் இல்லை. எனக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை இருந்திருந்தால் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பின் பேரில் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது திமுக அழுத்தம் கொடுத்து இருக்கிறது என்று சொன்னால் ஆரம்பத்தில் நான் இதை வெளிப்படையாக அதில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்திருக்க வேண்டும். அப்படி யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. இது வெறும் யூகங்களாக சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றன.
தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மாநாட்டின் போது, திமுகவையும், திமுக அரசையும் முதன்மையான எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் அவரும் நானும் அரசியல் பேசாமல் புத்தக வெளியீட்டு விழாவில் ஒருங்கிணைந்து நின்றாலும் கூட சுற்றியுள்ளவர்கள் அதனை அரசியலாக்குவார்கள். இதற்கென்று பல பேர் காத்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நான் தீனி போட விரும்பவில்லை. விஜய்யுடன் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவருடன் நிற்பதில் எந்த சங்கடமும் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதிலும் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் நானும் அவரும் ஒரே இடத்தில் நின்றால் அதை வைத்து இங்கே சூதாட்டம் ஆட விரும்புகிறார்கள்.
தமிழக அரசியலில் கலவரத்தை உருவாக்குவார்கள். குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கு இடம் தர நான் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக நூல் வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு விளக்கிப் பங்கேற்க இயலாத நிலையை ஏற்கனவே குறிப்பிட்டேன். ஏற்கனவே நான் கூறியது ஊடகங்களில் வரவில்லை. அதை நான் வெளிப்படையாகச் சொல்லவில்லை. எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு பார்வையோடு எடுத்த முடிவு. தமிழக அரசியல் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு. விசிக அங்கம் வகிக்கிற கூட்டணியின் நலன் கருதி எடுத்த முடிவு. என்னைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாருக்கும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இல்லை” எனப் பேசினார்.