'Decision taken by Omni Buses for people's welfare'- Minister Sivashankar interview

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயரும் நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்து புகார் எழுந்ததால்திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் சில பேருந்துகளைப் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்னும் இரு வாரங்களில் தீபாவளி திருநாள் வர இருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் ஐந்து சதவீதம் கட்டணத்தைக் குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன் வந்துள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

கடந்த இரண்டு வருடங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''தீபாவளி தினத்திற்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வோருக்குதக்க பயண வசதிகளை ஏற்பாடு செய்வதற்குத்தமிழக முதல்வர் கொடுத்தஉத்தரவின்படி காலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல ஆம்னி பேருந்துகள் இந்த தீபாவளியின் போது இயங்கக்கூடிய செயல்பாடுகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு போக்குவரத்துத் துறை ஆணையர் தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுடைய நலன் கருதி கட்டணக்குறைப்பு செய்ய வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டிருந்தோம். அந்த ஆண்டு அவர்களுடைய வலைத்தளத்தில், இணையதளத்தில் ஏற்கனவே இருக்கின்ற கட்டணத்தை விட 25 சதவீதம் குறைத்து கட்டணத்தை அறிவித்து, எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினார்கள். அதேபோல் கடந்தபொங்கல் அன்றும் புகார் இல்லாமல் ஆம்னி உரிமையாளர்கள் தங்களுடைய பேருந்துகளை இயக்கி ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்பொழுது இன்று நடைபெற்ற கூட்டத்தில் இன்னும் கூடுதலாகப் பொதுமக்கள் நலன் கருதி ஐந்து சதவீத கட்டணக் குறைப்பு செய்வது என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

Advertisment