Skip to main content

''காவிரி ஆணையத்தின் முடிவு தமிழகத்திற்கு பாதகமானது''- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
admk

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று பேரவையில் கொண்டுவரப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடகா ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. மேகதாது அணையை கொண்டு வருவோம் என கர்நாடகா அரசு பேசலாம், ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது திட்டத்திற்கு இசைவு தர மாட்டார்கள்'' என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கூச்சலிட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனை குறித்த அமைச்சர் துரைமுருகனின் விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், வெளியே வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,  ''இன்று சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28 வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்திற்கு பாதகமானது. இதை நான் சுட்டிக்காட்டினேன். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு படி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கு மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் அதிகாரம் உண்டு என ஆணையத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணையின் செயல்பாட்டை கண்காணித்தல் மற்றும் நீரை பாசன தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல் தான் அதன் பணிகள். தி.மு.க ஆட்சியில் ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28 வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அனுமதிக்க விட்டார்கள். மேகதாது அணை விவாதம் நமது எதிர்ப்பை மீறி செயல்பட்டு இருந்தால் உடனடியாக அதிகாரிகள் என்ன செய்திருக்க வேண்டும்.. அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.இது தமிழகத்திற்கு பாதகமான நிலையை உருவாக்கும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்