Advertisment

பாஜக மாவட்ட தலைவர் மீது கந்துவட்டி புகார்! – அடியாட்களான கட்சியினர்! 

Debt issue bjp leader

திருவண்ணாமலை மாவட்ட பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மீது திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கந்துவட்டி புகார் தமிழக காவல்துறை தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையிடம் விசாரணைக்கு வந்துள்ளது. புகார் தந்த தேவராஜிடம் நாம் பேசியபோது, “திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஜெஸி என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு ஃசைஸ் ஸ்டிக்கர் போட்டோ பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எடுத்து தருகிறேன். 1 ரூபாய் என்பது மிக குறைந்த கட்டணம், அதனை நான் சேவையாக செய்கிறேன். அதேபோல் புரோக்கர் கமிஷன் வாங்காமல் வீடு, கடை வாடகைக்கு பிடித்து தருவது, வயதானவர்களுக்கு செக்யூரிட்டி வேலை வாங்கி தருவது போன்றவற்றை செய்கிறேன். எனக்கு வருமானம் என்றால் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு ஐடி கார்டு தயார் செய்து தருவதில் வரும் வருமானத்தில் இருந்துதான் பலகாரியங்கள் செய்து வருகிறேன். கீழ்நாத்தூரில் என் வீடு உள்ளது, என் மனைவி இறந்துவிட்டார். மகன்கள், மகள் இருக்கிறார்கள். நான் சமூகசேவை செய்யப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு குடும்பத்தில் இருந்து விலகி தனியே வந்துவிட்டேன்.

Advertisment

பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தான் ஒரு டேட்டா சென்டர் தொடங்கப்போவதாகவும், அதற்கு ஒரு வாடகை வீடு தேவை எனச்சொல்லி என்னை சந்தித்தார். அப்போதுதான் அவருடன் எனக்கு அறிமுகம். சில வீடுகளை காட்டினேன், வேண்டாம் என்றார். அப்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது ஜீவானந்தம் என்னிடம் 2 லட்ச ரூபாய் பணம் தந்து, அக்கவுண்ட்டில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள் நான் கேட்கும்போது தாங்கள் என்றார். நானும் வாங்கி வைத்திருந்தேன். ஒரு மாதம் கடந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், என்னிடமிருந்தால் செலவாகிடும் எனச்சொன்னேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை, செலவு செய்துக்குங்க நான் கேட்கும்போது தாங்கள் என்றார். நானும் அந்த பணத்தை எடுத்து மெட்டீரியல்ஸ் வாங்கி கல்லூரிகளுக்கு ஐடி கார்டு தயார் செய்துவிட்டேன். 6 மாதம் கடந்த நிலையில் ஒருநாள் போன் செய்து நாளைக்கு பணம் வேண்டும், பணம் தரலன்னா கடையை பூட்டிடுவன்னு சொன்னார். நாளைக்கே எப்படிங்க 1 மாசம் டைம் தாங்கன்னு கேட்டன் தரல.

Advertisment

Debt issue bjp leader

மறுநாள் அவரும், அவரோட மனைவியும் வந்து என் கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த 8 பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு கடையை பூட்டி சாவி எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. நான் அதிர்ச்சியாகிப்போய் என்னங்க தொழில் செய்யற கடையை பூட்டிட்டிங்க. 10 நாள்ள பணத்தை தயார் செய்து தர்றன்னு சொன்னன், அதைக்கேட்டுக்கல. உள்ள டெலிவரி செய்ய வேண்டிய பொருட்கள் இருக்கு அதை டெலிவரி செய்தால் உடனே லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை கொண்டு வந்து தர்றன், மீதி 10 நாள்ள தர்றன்னு சொன்னதையும் கேட்கல. நான் அதிருப்தியாகி மும்பை போய்ட்டு அங்க சின்ன சின்ன வேலைகள் செய்துக்கிட்டு இருந்தன். ஒரு வருஷம் பொருத்து 2019 தொடக்கத்தில் போன் செய்து கூப்பிட்டார் ஜீவானந்தம். மும்பையில் இருந்து வந்த எங்கிட்ட கடை சாவியை தந்தவர் கடையை திறந்துக்க 6 மாதத்தில் பணம் தந்துடனம்னு சொன்னவர், நீங்க பணம் தர்றவரைக்கும் 2 லட்சத்துக்கு மாதம் 10 ஆயிரம் வட்டி தரனம்னு சொன்னார். நானும் சரின்னு வாங்கிக்கிட்டு வந்து கடையை திறந்தன். மாதாமாதம் வட்டி தந்துக்கிட்டு வந்தன்.

அப்போதுதான் கொரோனா வந்து, கடைகள் மூடப்பட்டது. வட்டி பணம் தரமுடியல. ஒருநாள் சதிஷ்குமார் என்பவர் அடியாட்களுடன் வந்து, பணம் தரலன்னா கடையை மூடுவன்னு மிரட்டனார். அவர்தானே பணம் தந்தார், நீங்க ஏன் கேட்கறிங்கன்னு கேட்டதுக்கு அவர்தான் உங்கிட்டிருந்து பணம் வசூல் செய்யச் சொல்லியிருக்கார். 10 நாள் டைம் தந்து பணம் தரலன்னதும் அவரும் கடையை மூடி சாவி எடுத்துக்கிட்டு போய்ட்டார்.

ஜீவானந்தத்துக்கிட்டப்போய் கொரோனாவால் வருமானம் இல்லை, சீக்கிரம் பணம் தந்துடறன்னு சொன்னன். செட்டிதெருவில் ஒரு மண்டபத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தாங்க பாஜக பிரமுகர்கள். வாங்கிய இரண்டு லட்சத்துக்கு பதில் 3 லட்சமா தரனும், அதுவரைக்கும் வட்டி தரனும் அப்படின்னு முடிவாகி சாவி தந்தாங்க. கடையை திறந்து நடத்திக்கிட்டு வந்தன்.

கடந்த 2022 மே மாதம் 10 பேரோட கடைக்கு வந்தார் பாஜகவின் நகர செயலாளரா இருக்கற செந்தில்வேலன். மாவட்ட தலைவர் ஜீவானந்தத்திடம் வாங்கன பணத்தை நீ எங்கிட்டதான் தரனம்னு சொல்லி ரொம்ப கேவலமாக அசிங்கமா பேசனார். என்னை மிரட்டி 4 ப்ளாங் செக், வெத்து பேப்பர், எழுதாத பாண்ட் பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கனார். என் கடை சாவியை நான் அவர்களிடம் தருவதுபோல் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. இன்னொரு பத்திரத்தில் நான் ஒருத்தருடைய வீட்டை குத்தகைக்கு வாங்கி தருவதா சொல்லி 2 லட்சம் பணம் வாங்கியதாகவும், 3 லட்ச ரூபாய் திருப்பி தரவேண்டும். அதுவரை கடையை அவர் பார்த்துக்கொள்வதாக சொல்லி நான் கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. இப்பவும் கடை மூடியே இருக்கும்.

நான் பணம் வாங்கியது உண்மை, தரமாட்டன்னு சொல்லவில்லை. எனக்கு டைம் தந்தால்தானே பணத்தை தர்றதுக்கு. முதல்ல கடையை மூடி சாவி எடுத்துக்கிட்டு போனதால் பொருட்களை டெலிவரி செய்ய முடியாததால் முதலில் 7 லட்ச ரூபாய் நஷ்டம். இரண்டாவது முறை கடையை மூடினப்ப 5 லட்சம் நஷ்டம். எனக்கு தொழில் நிமித்தமா வெளியில் இருந்து வரவேண்டிய தொகையே 20 லட்சத்துக்கு மேல இருக்கு. அதில் பாதிக்கு மேல வராது. இப்போதும் அவரோட பணத்தை தர்றதுக்கு இரண்டு, மூனு மாசம் டைம் தாங்க, தொழில் செய்ய விடுங்கன்னுதான் கேட்கறன். தொழில் செய்யவிடாம கடையை பூட்டிக்கிட்டா எப்படி பணம் தரமுடியும்?. அதான் போலிஸில் புகார் தந்திருக்கன்” என்றார்.

thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe