கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள துறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் செல்வகுமார்(27). கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்த இவர், கந்துவட்டி கொடுமையால் கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காவலர் ஒருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க சிறப்புக் குழுக்களை அமைத்து கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்கக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த இம்ரான்கான்(40) என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் முதலீட்டுக்காக குள்ளஞ்சாவடி அடுத்த சமுட்டிக்குகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க தெற்கு மாவட்ட ஜெ பேரவைத் தலைவர் சுப்பிரமணியத்திடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்ச ரூபாய்க் கடன் வாங்கியதாகவும், மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில், அதிக தொகை கேட்டு சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர் வடலூர் சேராக்குப்பம் முருகன் ஆகியோர் இம்ரான்கானுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது கந்துவட்டி தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தும் நிலையில், இம்ரான்கான் வடலூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், முருகனைத் தேடி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி, வடலூர், கடலூர் வண்டிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுப்ரமணியனுக்குச் சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையில் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று அதில் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேரிடம் கந்து வட்டி வசூல் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறுகையில், "மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்கத் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஏழு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஏற்கனவே கந்துவட்டி தொடர்பாகப் போடப்பட்ட வழக்குகளையும், புதிதாக வரும் புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுப்பார்கள். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபடுவார்கள்" என்றார்.