ADVERTISEMENT

மூடி மறைக்கப்படும் தொழிலாளர்கள் மரணங்கள்! - கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!

02:47 PM Sep 11, 2018 | raja@nakkheeran.in


வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரை ஓரம் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, விஷாரம், இராணிப்பேட்டை, ஆற்காடு பகுதிகளில் தோல்தொழிற்சாலைகள் உட்பட பல தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.

இராணிப்பேட்டையில் தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் பெர்பெக்ஷன் ஷீஸ் என்கிற தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில் கட்டிங் பிரிவில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகம்மதுஹாசன் என்கிற 21 வயது இளைஞரும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் இன்று (செப்.11) தொழிற்சாலையில் ஆப்ரேட்டராக பணியாற்றிவந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி முகம்மதுஹாசன் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என தகவல் கூறியதன் அடிப்படையில் அவரது உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் குறைந்தகூலிக்கு வடஇந்திய தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அப்படி பணி செய்யும் அவர்களுக்கு 12 மணி நேரம், 15 மணி நேரம் வேலை செய்ய வைப்பது, தங்க சரியான இடவசதி செய்து தராமல் கொடுமைப்படுத்தவதும் நிகழந்து வருகிறது. இதனால் சரியான தூக்கமும் இல்லாமல் வேலை செய்யும்போது இப்படிப்பட்ட விபத்துகளில் சிக்கி இறந்துவிடுகின்றனர். இதேபோல் காயம்பட்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் இன்னும் அதிகமாக இருக்கிறது.

​ இதையெல்லாம் கண்காணிக்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இருந்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இதனால் இப்படிப்பட்ட இறப்புகள் தொடர்ந்துக்கொண்டு இருக்கின்றன. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதுபோன்ற உயிரிழப்புகள் மூடி மறைக்கப்படுகின்ற என்கிறார்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT