/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kondalampatti police station1.jpg)
சேலத்தில், பட்டப்பகலில் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 28). அதே பகுதியில் வெள்ளி பொருள்கள் கடை வைத்துள்ளார். செப். 20- ஆம் தேதி, உணவு இடைவேளையின்போது கடையைப் பூட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் கடைக்குத் திரும்பினார். அப்போது கடையின் வாயில் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, அரை கிலோ வெள்ளி பொருள்கள், 2 கிராம் தங்கம், கல்லாவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து துரைராஜ், கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மூலம் நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us