Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Advertisment

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார்.

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்