டெல்லி எஜமான் கோபித்துக் கொள்வார் என்ற பயமா? - பழனிசாமியை விமர்சித்த தயாநிதி மாறன்

Dayanidhi Maran questions Edappadi Palaniswami on TASMAC dispute

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறிய அமலாக்கத்துறை இது தொடர்பாக அடுத்தடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளில் அதிரடியாகச் சோதனை நடத்தியது. மேலும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இது ஆளும் திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தில் அந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, ‘தனி நபர்கள் செய்த விதிமுறை மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?. அமலாக்கத்துறை வரம்பு மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்று கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி எடாப்பாடி பழனிசாமியை திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள் பதிவில், “மருதமலை திரைப்படத்தில் கைதியை தப்பவிட்ட வடிவேலுவை பார்த்து அர்ஜுன், “என்னென்னமோ பேசுவியே இப்ப பேசுடா... எதாவது பேசுடா’’ என்ற காமெடிதான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது. எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வரும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா? ED, தன் வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா?

“அமலாகத்துறை சோதனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்’’ எனக் கடந்த 17-ம் தேதி வீராவேசமாகக் கேட்ட சூராதி சூரர் யார்? அந்த சூனா பானாவை கண்டா வரச் சொல்லுங்க… கையோடு கூட்டி வாருங்க. பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல் செய்யும் ’பச்சைப் பொய்’ பழனிசாமி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டு, வெட்கி தலைகுனிய வேண்டும்! பாஜகவின் அடிமையாக வாழ்ந்து, அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி, கீழ்த்தரமான அரசியல் செய்து வரும் பழனிசாமியின் அருவருக்கத்தக்கப் பித்தலாட்ட அரசியல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. பழனிசாமி பதில் சொல்லுவாரா... பம்மி கிடப்பாரா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

admk Dhayanidhi maran enforcement directorate TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe