Skip to main content

மகள் மாயமானதால் விரக்தி; கணவருக்கு விஷம் கலந்த உணவு; எலி மருந்து குடித்து மனைவி தற்கொலை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

 

daughter missing parents incident salem ammapet police investigation


சேலத்தில், மகள் மாயமானதால் விரக்தி அடைந்த தாயார், கணவருக்கு விஷம் கலந்த உணவை சாப்பிடக் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் பொன்னம்மாபேட்டை மல்லி தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 47). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி சுஜாதா (வயது 39). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ் 1 படித்து வருகிறார்.

 

இவர், அடிக்கடி அலைபேசியில் யாருடனோ பேசி வந்திருக்கிறார். இதனை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் மீண்டும் அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் செப். 21- ஆம் தேதி, அலைபேசியில் பேசிய மகளை மீண்டும் தாய் சுஜாதா கண்டித்துள்ளார். 

 

அன்று மாலை 03.00 மணியளவில் திடீரென்று மகள் மாயமானார். தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தும் அவள் சென்ற இடம் குறித்த விவரம் தெரியவில்லை. தான் திட்டியதால்தான் மகள் ஓடிச்சென்று விட்டாளோ என்ற குற்ற உணர்விலும், பாசத்திலும் தடுமாறிய சுஜாதா தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். கணவரையும் கொன்றுவிட எண்ணியுள்ளார். 

 

கடையில் இருந்து எலி மருந்தை வாங்கி வந்த அவர், கணவருக்குத் தெரியாமல் அவருக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து சாப்பிடக் கொடுத்துள்ளார். அதையறியாத கணவரும், உணவை சாப்பிட்டுள்ளார். அதையடுத்து சுஜாதாவும் விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன், மனைவி இருவரும் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா இறந்தார். கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான மகளையும் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.