
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். அவரது மனைவி மீனம்பாள் (65). அவர்களுக்கு மகன் முருகன், 3 மகள்கள் உள்ளனர். நடேசன் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, மகன் முருகனுக்கு திருமணமாகி தாயுடன் இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் முருகனும் இறந்துவிட்ட நிலையில், அதுவரை குடியிருந்த வீட்டில் மீனம்பாள் தங்குவதற்கு மருமகள் அனுமதிக்கவில்லை.
இதனால் அறந்தாங்கியில் உள்ள தனது இரண்டாவது மகள் வீட்டில் தங்கி இருந்தவர், நேற்று முன்தினம் (09.02.2021) உடல்நலக்குறைவால் இறந்துவிட, உறவினர்கள் மீனம்பாளின் ஊரான ஆவணத்தான்கோட்டையில் அவரது வீட்டிலேயே வைத்து இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று சடலத்தை தூக்கி வந்துவிட்டனர். ஆனால் வீட்டில் இருந்த மருமகள் ‘மாமியார் உடலை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது, மீறி கொண்டு வந்து வைத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார். உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சொன்ன சமாதானத்தை மருமகள் ஏற்கவில்லை.
பலமுறை பேசியும் மருமகள் ஒத்துக்கொள்ளாத நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளஞ்செழியன், தானாக முன்வந்து ‘என் வீட்டில் வைத்து அனைத்து சடங்குகளும் செய்யுங்கள்’ என்று சொன்னதோடு, அவரது வீட்டில் வைத்து மீனம்பாளுக்கு இறுதிச் சடங்குகள் செய்து தகனமும் செய்தனர். வாழும்பே்துதான் விரட்டப்பட்டார், இறந்த பிறகு கூட அவரது உடலை வீட்டில் வைக்க அனுமதிக்காத சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியது.