Skip to main content

நான்காவது திருமணத்திற்கு திட்டமிட்ட மருமகள்; மாமியாரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையுடன் கைது

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Daughter-in-law planning fourth marriage

 

நான்காவது திருமணத்திற்கு திட்டமிட்ட மருமகள், தடுத்து நிறுத்த முயன்ற மாமியாரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.

 

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மெரி டெய்சி (72). இவருடைய மூத்த மகன் அந்தோணி சேவியர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்தோணி சேவியரின் இரண்டாவது மனைவி ரெபேக்கா. கணவர் அந்தோணியின் மறைவுக்கு பிறகு மாமியார் டெய்சியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென டெய்சி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை தாக்க முயன்றனர். அப்பொழுது வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் டெய்சியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

தாக்குதல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் மருமகள் ரெபேக்காவை போலீசார் விசாரணை செய்தனர். அப்பொழுது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கணவர் அந்தோணி சேவியர் மறைவுக்கு பிறகு ரெபேக்காவின் நடவடிக்கைகள் மாமியார் டெய்சிக்கு பிடிக்காமல் போக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். அதேநேரம் தனக்கு சொத்து வேண்டும் என மருமகள் ரெபேக்காவும் சண்டையிட்டுள்ளார்.

 

குன்னூரை சேர்ந்த ரெபேக்கா மூன்றாவதாக அந்தோணி சேவியரை திருமணம் செய்த நிலையில் அவர் மறைந்துவிட்டதால் நான்காவதாக வேறொரு நபரை திருமண செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கு தடையாக இருந்த மாமியார் டெய்சி கொல்லத் திட்டமிட்டு திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். ராஜேஷ் என்ற அந்த நபர் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களை கூலிப்படைக்கு தயார் செய்த நிலையில் மூன்று பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் தருவதாக ரெபேக்கா தெரிவித்துள்ளார்.

 

விசாரணையில் ரெபேக்கா கொடுத்த தகவலின் அடிப்படையில் டெய்சியை கொலை செய்ய முயன்ற கூலிப்படை தலைவன் ராஜேஷ், 14 வயது சிறுவர்கள் மற்றும் ரெபேக்கா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்