
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டவர்கள் குறித்து கமல் புகழாரம் சூட்டி பேசினார்.
அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் குறித்து மேடையில் பேசிய கமல், “கன்னடத்தில் இருந்து இங்கு வந்த சிவ ராஜ்குமார், என் மகனாகவும் ரசிகனாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் வந்திருக்கிறார்” என்றார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது அனுபவங்களை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார்.
கமலின் இந்த பேச்சுக்கு, கர்நாடகாவில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட மொழியை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் அவமரியாதை செய்வது பண்பாடற்ற செயல். குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த கமல்ஹாசன் தனது தமிழ் மொழியைப் போற்றும் போது, சிவ ராஜ்குமார் உட்பட கன்னட மொழியை அவமதித்துள்ளார். இது ஆணவத்தின் உச்சம்' என தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சீமான், விசிக தலைவர் திருமா ஆகியோர் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.
கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.