
லாரி உரிமையாளரிடம் 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் மற்றும் தாசில்தாரின் வாகன ஓட்டுநர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பேரளம் பகுதியில் கே.பி.கே. குமார் என்பவர் அப்பகுதி லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்துவருகிறார். இவருக்குச் சொந்தமான லாரியில் நேற்று ‘எம் சாண்ட்’ மணல் ஏற்றி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நன்னிலம் வட்டாட்சியர் லட்சுமிபிரபா, லாரி ஓட்டுநரிடம் எடை அதிகமாக உள்ளதாகக் கூறி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் கே.பி. குமாரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். விவரம் அறிந்து கோபம் அடைந்த குமார், இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்குத் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய பணத்தை கே.பி. குமாரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட தபால் நிலையத்தில் வட்டாட்சியர் லட்சுமி பிரபா மற்றும் அவரது ஓட்டுநர் லெனின் இருவரும் 8,000 ரூபாய் லஞ்சம் பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், தபால் நிலையத்தின் முதல் மாடியில் தனி அறையில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்தபிறகு கைது செய்யப்படுவார்கள் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகின்றனர்.