
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி தாசில்தாராக உள்ளவர் ராஜன்.இவர் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். நேற்று (25.04.2021) காலை ஒன்பது முப்பது மணி அளவில் வழக்கம்போல் விழுப்புரத்திலிருந்து செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான பொலிரோ காரை அவரே ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
செஞ்சி அருகில் உள்ள பாலப்பட்டு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்தபோது தாசில்தாரின்கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது 15 வயது மகளான மணிமேகலை மீது மோதியுள்ளது. இதில் மணிமேகலை, தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
மணிமேகலை, தாசில்தார் ராஜன் இருவரையும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் உதவியுடன் காரில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் படுகாயமடைந்த மணிமேகலை, செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை குணசேகரன் அனந்தபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வட்டாட்சியர் ராஜன்மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டாட்சியர் ஓட்டி வந்த கார், பள்ளி மாணவி மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)