
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள சோமனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவின்போது பள்ளி மாணவர்கள் பாமகவின் கட்சித் துண்டை பயன்படுத்தி நடனம் ஆடியது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவர்கள் நடனம் ஆடுவதற்கு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு ஆசிரியர்கள் பொறுப்பேற்ற நிலையில் சம்பந்தப்பட்ட கட்சிக் துண்டுடன் மாணவர்கள் நடனம் ஆடிய பாடலுக்கு பொறுப்பேற்ற தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழு நாட்களில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் தெரிவித்துள்ளார்.