
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து மதத்தைக் காரணம் காட்டி தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக பரதநாட்டிய கலைஞர் தெரிவித்துள்ளது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பரதநாட்டிய கலைஞரான இவர், நடனத்திற்காக தமிழ்நாடு அரசின் பாராட்டைப் பெற்றவர். மேலும், கோவிலில் பரதநாட்டியம் அரங்கேற்றமும் செய்துள்ளார். இஸ்லாம் மதத்தில் பிறந்திருந்தாலும் வைணவத்தை ஏற்று எப்பொழுதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், அண்மையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற ஜாகீர் உசேனை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வெளியே போகச் சொல்லி ஆபாசமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. கோவில் வாயில்வரை அவரை திட்டிக்கொண்டே அந்த நபர் அவரை வெளியேற்றினார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ஜாகீர் உசேன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ''கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு பலகை பழைய நடைமுறை. மத நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் இறை நம்பிக்கை உள்ளவர்களை அனுமதிக்க வேண்டும். நான் பெருமையாகச் சொல்வேன்,இஸ்லாமில் பிறந்து வைணவத்தை ஏற்றாலும் இஸ்லாமைச் சேர்ந்தவர்களாலோ அல்லது இந்துக்களாலோ எந்த மிரட்டலும் இதுவரை வந்ததில்லை. இந்த சர்ச்சைக்குப் பிறகு கூட வரவில்லை. நான் பெருமாளை சேவிக்க உள்ளே போன உடனே, ‘நீ எப்படி உள்ள வரலாம்.... ' எனச் சொல்லமுடியாத வார்த்தைகளால் கிளி மண்டபத்திலிருந்து வெளியே வரை திட்டி வெளியே அனுப்பினார்'' என்றார்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us