Damage to electronic voting machines

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முல்டாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் நேற்று (07.05.2024) வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு (07.05.2024) பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்தது. அச்சமயம் வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் இந்தத்தீ விபத்தில் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் சேதமடைந்தன.

இது குறித்து பெதுல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. நிஷால் ஜாரியா கூறுகையில், “ஆறு வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சாவடி பணியாளர்கள் பேருந்தில் வந்துகொண்டிருந்தனர். இயந்திரக் கோளாறால் இந்தத்தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முற்றிலும் சேதமடையவில்லை. 4 அவற்றின் பாகங்களில் சிறிய சேதம் ஏற்பட்டது. 36 பேர் இந்தப் பேருந்தில் இருந்தனர். தீ விபத்தின் போது பேருந்தின் கதவுகள் அடைக்கப்பட்டடிருந்தால் பஸ்சின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தனர். அதன் பின்னர் அவர்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Damage to electronic voting machines

Advertisment

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பெதுல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அங்கிருந்து வரும் உத்தரவுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். வாக்குச்சாவடி பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் வாக்குச்சாவடி பொருட்களை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கருத்துப்ப்படி இது இயந்திரக் கோளாறு என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து 2 ஆம் கட்டத்திலிருந்து 3 ஆம் கட்டத்துக்கு மாற்றப்பட்ட பெதுல் தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.