daily wages employee incident in rasipuram police investigation

Advertisment

ராசிபுரம் அருகே, கூலித்தொழிலாளியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. சுகன்யாவும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

வேலைக்குச் செல்லும்போது குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். கணவன், மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை(மே 13) வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர்.அன்று இரவு, ஈஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இரவு 08.00 மணியளவில் வீட்டுக்குச் சென்றார். இரவு 09.00 மணியளவில் சுகன்யாவும் குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

Advertisment

அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ஈஸ்வரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா, கதறித்துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் ராசிபுரம் காவல்நிலையத்திற்குத்தகவல் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக ஈஸ்வரன் கொல்லப்பட்டாரா அல்லது மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சம்பவத்தன்று அவரைக் கடைசியாக பார்த்த நபர்கள் யார் யார்?, அவருடைய நண்பர்கள் யார், செல்போனில் கடைசியாக அவர் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ஓரிரு நாட்களில் கொலையாளியைக்கண்டுபிடித்து விடுவோம் என காவல்துறையினர் கூறினர். இந்தச் சம்பவம் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.