சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி மற்றும் என்.எம்.ஆர் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூ 40 சம்பளத்திற்கு  பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு  கடந்த ஒரு வருடங்களாக ரூ 440 தினக்கூலி  உயர்வு  பெற்றுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிச்சிக்கலை காரணம் காட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொற்ப கூலியை பெற்றுக் கொண்டு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என இருந்த தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறையின் முன்பு ஒரு வாரத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதனம் செய்து அனுப்பினர். இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை. மேலும் பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையினை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  இதனையறிந்த தினக்கூலி, என்.எம்.ஆர் தொழிலாளர்கள்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில்  பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்க. தமிழ் ஒளி மற்றும் கட்சியினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வி.எம்.சேகர்,  வட்ட செயலாளர் தமிம்முன்சாரி,  காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின்,  மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத் குமார், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க தலைவர் மனோகரன், பொருளாளர் ரவி,  ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன், பேராசிரியர் செல்வராஜ்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிளை செயலாளர் பாண்டியன், பல்கலைக்கழக கிளை செயலாளர் ஜான்,   ஓய்வூதியர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், என்.எம்.ஆர்.  தினக்கூலி  தொழிலாளர்கள்  உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து துணைவேந்தர் குழு உறுப்பினர் அலுவலகத்தில் சிதம்பரம் வட்டாட்சியர் கீதா, பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி,  பல்கலைக்கழக ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களுடன்  அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடனடியாக ஜூன் மாதம் சம்பளத்தை வழங்குவது என்றும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் என்.எம்.ஆர் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை இல்லை என்றும் இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பல்கலைக்கழக கல்வி குழுவிற்கு (சின்டிகேட்) பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.