Skip to main content

தர்பார் பட விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்!- ஏ.ஆர்.முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கொலை மிரட்டல் விடுத்த தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் புகார் எழுப்பினர். இதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக, விநியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

DARPAR FILM DISTRIBUTORS AR MURUGADOSS CHENNAI HIGH COURT

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் இயக்குனராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
 

இந்த வழக்கு நேற்று (17/02/2020) மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு 15 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குனர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதனை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

DARPAR FILM DISTRIBUTORS AR MURUGADOSS CHENNAI HIGH COURT

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது. பின்னர், சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் எனத் தெரிவிப்பது  கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்தார். மேலும், நீங்கள் நினைத்தபடி சென்னை உயர்நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, பின்னர் முருகதாஸ் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.