Skip to main content

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் -டி.ராஜா

Published on 18/02/2018 | Edited on 18/02/2018


 

raja d

புதுச்சேரியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா புதுச்சேரி மாநிலத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.
 

அந்த வகையில் புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக சலீம், துணை செயலாளர்களாக அபிஷேகம், கீதநாதன், பொருளாளராக சுப்பையா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யபட்டு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அறிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- 
 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் குறித்து பிரதமரும், நிதித்துறை அமைச்சரும் மௌனம் காப்பது ஏன்...? பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரிய ஊழல் எப்படி நடைபெற்றது? இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறும் வரை ரிசர்வ் வங்கி என்ன செய்தது? நிதித்துறை என்ன செய்தது..? மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நிதிநிலை குறித்து விவாதிக்கும் போது இந்த பிரச்சினை பெரிய அளவில் எழும்.
 

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்காதது குறித்து புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி விளக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசால் புதுச்சேரி மாநிலம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆளுநர் கிரண்பேடி மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பாராளுமன்றத்தில் பேசி வருகிறோம். கிரண்பேடி எதேச்ச அதிகாரத்தில் செயல்படக்கூடாது என்றார். 
 

மேலும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டி.ராஜா கருத்து தெரிவிக்கையில், "இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அவர்கள் ஆரம்பிக்கும் கட்சியின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பொருத்தே கருத்து கூற முடியும்" என்றார்.
 

சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்