Skip to main content

'சிலிண்டர் விலை உயர்வு...' பேய் வேடம் போட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

Naam tamizhar

 

வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு வானுயர உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், விலை உயர்வை குறைக்கக்கோரியும் தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

 

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சொத்துவரி உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் கதிர்காமன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், ராஜா, தொகுதி துணைச் செயலாளர் பீட்டர், தொகுதி தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் முருகன், அசோக் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்ட போராட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது.

 

போராட்டத்தின்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் கதிர்காமன், பேய் வேடம் அணிந்து அடுப்பில் காலை நீட்டி எரியும் அடுப்பின் மீது வாணல் வைத்து வடை, அப்பளம்  செய்வது போன்று சமையல் செய்துகாட்டி போராட்டத்தினை வித்தியாசமான முறையில் நடத்திக் காட்டினார்கள். இவர்களின் வினோத போராட்ட நிகழ்வினை கண்ட பொதுமக்கள் அதை வியப்புடன் பார்த்தனர். போராட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் பெருமளவில் கூடினார்கள். இதனால் பாலக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மாநில அரசுகள் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும் இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் செலவுகள் அதிகரித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே போர்க்கால அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பேசினார்கள். இந்த வித்தியாசமான போராட்டம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.